வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 10

மகாராட்டிர மாநிலத்தில் உள்ள கோண்டியா மாவட்டத்தில் 28.10.2008 அன்று காலை பள்ளிக்கூடத்திற்குச் சென்ற சப்னா தன்ராஜ் ரகாத்தே என்ற தலித் பெண்ணை, அந்த கிராமத்தில் உள்ள சாதி இந்து ஒருவன் அவமானப்படுத்த முயன்றான். தீரமுடன் அவனை எதிர்த்த சப்னாவை, பள்ளிக்கு சைக்கிளில் செல்லும்போது பின்னாலேயே டிராக்டரை கொண்டு வந்து மோதியதில், அப்பெண் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இக்குற்றவாளி கைது செய்யப்பட்டும், அமர்வு நீதிமன்றம் குற்றவாளியை பிணையில் விடுவித்திருக்கிறது. விரிவான செய்திக்கு பார்க்க : - (atrocitynews.wordpress.com)
.
வன்கொடுமை வழக்குகளை நீர்த்துப் போகச் செய்வதில் காவல் துறைக்குச் சற்றும் குறையாத அளவில் நீதித்துறையும் பங்களித்து வருகிறது. ஆனால், நீதித்துறையின் இக்குறைபாடு ஒரு சில சமயங்களில் மட்டுமே சரி செய்யப்படுகிறது. காரணம், நீதித்துறைக்கே உரிய சட்ட நுணுக்க வரையறைகள்தாம். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை, அதன் நோக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாட்டிலிருக்கும் விசாரணை நீதிமன்றம் - காவல் துறையின் கைப்பாவையாகச் செயல்பட்ட ஒரு வழக்கையும், அவ்வழக்கு தொடர்பான மனுவின் பேரில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பையும் பார்ப்போம்.
.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டத்திலுள்ள கீரணி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி. விவசாயத் தொழில் புரியும் தலித் சமூகத்தைச் சேர்ந்த அழகர்சாமி, தலித்துகளின் உரிமைகளுக்காகப் போராடும் அமைப்பு களில் ஈடுபாடு கொண்டவர். ஒரு முறை, அரசு நிலத்தில் உள்ள மரங்களை அரசு அனுமதியின்றி வெட்டி எடுத்துச் சென்ற நபர்கள் மீது அழகர்சாமி வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.
.
10.11.1997 அன்று மாலை 4.30 மணியளவில் லட்சுமணன் என்பவருக்குச் சொந்தமான அனுமந்தக்குடியிலுள்ள அரிசி ஆலை முன்பு அழகர்சாமி நின்று கொண்டிருக்கும்போது, ஆலங்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரும் ஆலங்குடி மற்றும் லக்கமாரி ஆகிய ஊர்களைச் சேர்ந்த கள்ளர் சமூகத்தைச் சார்ந்த ஒரு சிலரும் அழகர்சாமியை சூழ்ந்து கொண்டனர். சுப்பிரமணியன் தன் செருப்பைக் கழற்றி, “நொக்கால் பள்ளப் பயலுகளுக்கெல்லாம் என்னடா சூத்துக் கொழுப்பேறிப் போச்சா' என்று கத்திக் கொண்டே அழகர்சாமியின் தலையிலும் கன்னத்திலும் அடித்தார். “அடிக்காதிய, அடிக்காதிய'' என்று கத்திக் கொண்டு அழகர்சாமி தன் மீது விழுந்த அடியை கைகளால் தடுக்கும்போது, சுப்பிரமணியனுடனிருந்த நான்கு நபர்கள் அழகர்சாமியை கைகளால் அடித்தனர். சத்தத்தை கேட்டு தைன்சும், துரைராஜு என்பவரும் ஓடி வந்து தலையிட்டு அழகர்சாமி மேலும் தாக்கப்படுவதிலிருந்து காப்பாற்றினர்.
.
அன்றைய தினமே இரவு 8 மணியளவில் அழகர்சாமி தேவகோட்டை வட்டக் காவல் நிலையத்திற்குச் சென்று சம்பவம் குறித்து புகார் அளித்தார். அப்போது பணியிலிருந்த காவல் உதவி ஆய்வாளர் அருள் சந்தோஷமுத்து, அழகர்சாமியின் புகாரைப் பெற்று அதனடிப்படையில் (குற்ற எண்.229/1997) வழக்கை இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 147 (கலகம் விளைவித்தல்), 341 (வழி மறித்தல்), 355 (இழிவுபடுத்தும் நோக்கத்துடன் குற்றமுறு தாக்குதல் செய்தல்) மற்றும் 323 (சொற்ப காயம் விளைவித்தல்) உடனிணைந்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 3(1)(x)இன் கீழ் (பொதுப் பார்வையில் பட்டியல் சாதியினரையோ, பழங்குடியினரையோ அவமானப்படுத்துதல் என்ற அடிப்படையில் அச்சுறுத்துதல் மற்றும் இழிவுபடுத்துதல்) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார்.
.
முதல் தகவல் அறிக்கையின் அசல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட சிவகங்கை சிறப்பு நீதிமன்றத்திற்கும் (முதன்மை அமர்வு நீதிமன்றம்) அதனுடைய நகல், வன்கொடுமைத் தடுப்புச் சட்டக் குற்றங்களின் புலன் விசாரணை அதிகாரியான சிவகங்கை துணைக் காவல் கண்காணிப்பாளருக்கும் (நாகராஜன்) அனுப்பி வைக்கப்பட்டது. இரவு 8.45 மணிக்கு அழகர்சாமியைப் பரிசோதித்த மருத்துவர், அழகர்சாமியின் கன்னத்திலும் தலையிலும் காயங்கள் இருந்ததைப் பதிவு செய்தார். மருத்துவர் அளித்த காயச் சான்றிதழில் அழகர்சாமி தனக்குத் தெரிந்த நபர்களால் தாக்கப்பட்டதாகக் கூறியுள்ளது குறித்து குறிப்பிடப்பட்டது.
.
வழக்கின் புலன் விசாரணை அதிகாரியான துணைக்காவல் கண்காணிப்பாளர், 12.11.1997 அன்று நண்பகல் 1 மணியளவில் முதல் தகவல் அறிக்கை கிடைக்கப் பெற்று புலன் விசாரணையைத் தொடங்கினார். மதியம் 3 மணிக்கு சம்பவ இடமான அனுமந்தக்குடிக்குச் சென்று அழகர்சாமி, லட்சுமணன், செல்லையா, மாணிக்கம், ராமநாதன் மற்றும் செல்லான் ஆகியோரை விசாரித்தார். புலன் விசாரணையின்போது, அழகர்சாமி தன் புகாரில் கூறியிருந்தவாறே சம்பவத்தை விவரித்தார். லட்சுமணன் மற்றும் செல்லையா ஆகியோர் சம்பவம் நடைபெற்றதாகக் கூறினாலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அழகர் சாமியை சாதிப் பெயரைச் சொல்லி பழித்துரைக்கவில்லை என்று கூறினர்.
.
அதனடிப்படையில் துணைக் காவல் கண்காணிப்பாளர், அழகர்சாமி கொடுத்த புகார் மிகைப்படுத்தப்பட்டதெனவும், சம்பவம் நடைபெற்றதுதான் என்ற போதிலும், குற்றம் சாட்டப்பட்டவர்களை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தியதாக புகாரில் பொய்யாகத் தெரிவித்துள்ளார் என்றும் முடிவு செய்தார். எனவே, வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 3(1)(ஙீ)அய் வழக்கிலிருந்து நீக்கம் செய்ததுடன், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 147, 341, 355 மற்றும் 323 ஆகிவற்றிற்காக மேல் நடவடிக்கை எடுக்கச் வழக்குக் கோப்பினை தேவகோட்டை வட்டக் காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளருக்கு துணைக் காவல் கண்காணிப்பாளர் - வழக்கைப் புலன் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட அன்றே (12.11.1997) திருப்பி அனுப்பி வைத்தார்.
.
அதன்படி மேல் விசாரணையை 20.11.1997 அன்று மேற்கொண்ட காவல் ஆய்வாளர், அன்றே சம்பவ இடம் சென்று 8 சாட்சிகளை விசாரித்து, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 147, 341 (வழிமறித்தல்), 355 மற்றும் 323 (சொற்ப காயம் விளைவித்தல்) ஆகியவற்றிற்கு மட்டுமே சாட்சியம் உள்ளதாகக் கருதி, அன்றே (20.11.1997) சுப்பிரமணியனைக் கைது செய்தார். முதல் தகவல் அறிக்கை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால், கைது செய்யப்பட்ட சுப்பிரமணியனை நீதிமன்றக் காவலுக்குட்படுத்த முதல் தகவல் அறிக்கையை தேவ கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறு காவல் ஆய்வாளர் வேண்டுகோள் அனுப்பினார். ஆனால், அமர்வு நீதிபதி அன்றைய தினம் விடுப்பில் இருந்தமையால் காவல் ஆய்வாளரே, "28.11.1997 அன்று குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்ற' நிபந்தனையுடன் சுப்பிரமணியனை பிணையில் விடுவித்தார்.
பின்னர், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 341 மற்றும் 323 ஆகியவற்றின் கீழ் மட்டுமே குற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக சுப்பிரமணியன் மீது மட்டும் காவல் ஆய்வாளர் மறுநாளே (21.11.1997) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். மேலும், காவல் ஆய்வாளர் அனுப்பிய வேண்டுகோளை ஏற்று சிறப்பு நீதிமன்றம் 25.11.1997 அன்று முதல் தகவல் அறிக்கையை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு அனுப்பியது.
.
28.11.1997 அன்று குற்றவியல் நடுவர் வழக்கை கோப்பிற்கு எடுத்துக் கொண்டதுடன், அன்று நீதிமன்றத்தில் முன்னிலையான சுப்பிரமணியத்தின் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 341 மற்றும் 323 ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கு அவரது பதிலுரையைக் கேட்க, குற்றத்தை ஒப்புக் கொண்டதாக சுப்பிரமணியன் கூறினார். அதனடிப்படையில் அவருக்கு இந்திய தண்டனை சட்டப் பிரிவு 341இன் கீழான குற்றத்திற்கு 100 ரூபாய் அபாரதமும், கட்டத்தவறினால் 1 வார சாதாரண சிறைத்தண்டனையும், இந்திய தண்டனை சட்டப் பிரிவு 323இன் கீழான குற்றத்திற்கு 150 ரூபாய் அபராதமும், கட்டத்தவறினால் 3 வார சாதாரண சிறைத் தண்டனையும் விதித்தார் குற்றவியல் நடுவர். அன்றே அபாரதத் தொகை செலுத்தப்பட்டு வழக்கு முடிக்கப்பட்டது.
.
இவ்வாறாக, வன்கொடுமைக்கு ஆளான புகார்தாரருக்கு எவ்விதத் தகவலும் தெரிவிக்கப்படாமலேயே, அவருடைய பங்கேற்பு இல்லாமலேயே வழக்கு முடித்துக் கொள்ளப்பட்டது. புலன் விசாரணை சட்டமுரணா கவும் பாரபட்சமாகவும் காவல் துறையால் நடத்தப்பட்டது குறித்தும், நீதிமன்றங்கள் (சிறப்பு நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்) இவ்வழக்கை சட்ட நெறிமுறைகளுக்கு எதிராக கையாண்ட முறை தவறு என்றும், தக்க தீர்வழிகளைக் கோரியும் அழகர்சாமி தரப்பில் வழக்குரைஞர் பொ. ரத்தினமும் இக்கட்டுரையாளரும் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினர்.
.
கடும் சட்ட விதிமீறல்களை உயர் நீதிமன்றம் இவ்வழக்கில் கண்டபோதிலும், இவ்வழக்கை சட்ட விதிகளின்படி ஏற்கக் கூடாதென அரசுத் தரப்பிலும், துணைக் காவல் கண்காணிப்பாளர் தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, இவ்வழக்கின் குற்ற நிகழ்வில் குற்றம் சாட்டப்பட்ட நபர் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டதால், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு விட்டார். அத்துடன் வழக்கு முடிவடைந்து விட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட தண்டனை மேல்முறையீடு வழியாகவோ, சீராய்வு மூலமாகவோதான் சரியா, தவறா என்பதை சீர்தூக்கிப் பார்க்க முடியும். உயர் நீதிமன்றத்தின் உள்ளுறை அதிகாரத்தின் கீழ் (Inherent power) இவ்வழக்கை விசாரித்து, மறு புலனாய்வுக்கு உத்தரவிடக் கோர முடியாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
.
இந்த எதிர்வாதத்தை உயர் நீதிமன்றம், இவ்வழக்கை தொடக்க முதலே எவ்வகையிலெல்லாம் நீர்த்துப் போகச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றும், அவை சட்ட நெறிமுறைகளுக்கு எதிராக அமைந்திருப்பதையும் சுட்டிக்காட்டி ஏற்க மறுத்தது. மேல்முறையீடு அல்லது சீராய்வு ஆகிய தீர்வழிகள் சட்டத்தில் சொல்லப்பட்டிருப்பினும், உயர் நீதிமன்றத்தின் உள்ளுறை அதிகாரம் சட்டவழியைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், மற்ற வகையில் நீதியின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலும் பயன்படுத்தலாம் என்ற அடிப்படையில் இந்த எதிர்வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்தது.
.
வழக்கின் அடிப்படையைப் பொருத்தும் ஓர் எதிர்வாதம் வைக்கப்பட்டது. சம்பவத்தின்போது அழகர்சாமியை சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசவில்லை என்பதால், வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவு 3(1)(ஙீ) அய் நீக்கியது சரியே என்று வாதிடப்பட்டது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர், முதல் தகவல் அறிக்கை புகாரிலேயே சம்பவத்தைக் கண்ணுற்ற சாட்சிகளாகக் குறிப்பிட்டிருந்தவர்களை - புலன்விசாரணை செய்த துணைக் காவல் கண்காணிப்பாளர் விசாரணை செய்யாமலே விட்டுவிட்டது ஒரு புறமிருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள், பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒரு நபரை செருப்பால் அடித்தார்கள் என்பதே வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 3(1)(x)இல் குறிப்பிட்டுள்ளவாறு - பட்டியல் சாதியினரை “வேண்டுமென்றே இழிவு படுத்தும்'' செயலாகக் கருதப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் விளக்கமளித்தது.
.
இதன் மூலம் (சாதி பெயரைச் சொல்லி இழிவுபடுத்தினால் மட்டுமே), வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 3(1)(ஙீ)இன்படி குற்றச்சாட்டு பதிவு செய்ய முடியும் என்ற சமூகப் பார்வையை சட்டத்திற்குள் புகுத்தியுள்ளது உயர் நீதிமன்றம். அந்த வகையில், இத்தீர்ப்பு மிகவும் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.
.
தொடர்புடைய சட்டப்பிரிவுகளையும் முன்தீர்ப்புகளையும் விரிவாக விவாதித்த உயர் நீதிமன்ற நீதிபதி எம். கற்பக விநாயகம், 23.9.1999 அன்று வழங்கிய தீர்ப்பில் தேவக்கோட்டை குற்றவியல் நடுவர் வழங்கிய தீர்ப்பை நீக்கறவு செய்தும், வழக்கை வேறு ஒரு துணைக் காவல் கண்காணிப்பாளர் மூலம் மறுபுலனாய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார். வன்கொடுமை வழக்கை நீர்த்துப் போகச் செய்த புலன்விசாரணை அதிகாரிகளான துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் மீது துறைசார்ந்த நடவடிக்கையும், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க அழகர்சாமியின் மனுவில் கோரப்பட்டிருந்த போதிலும், அது தொடர்பாக உத்தரவு ஏதும் வழங்கப்படவில்லை. இருப்பினும், அவ்விருவரின் செயல்பாடுகள் குறித்த தனது கடும் அதிருப்தியை உயர் நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.
.
இத்தீர்ப்பின் நகலை தமிழக உள்துறை செயலருக்கு அனுப்பவும், அவர் அதை நகலெடுத்து மாநிலத்தின் அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்து நடைமுறைப்படுத்தவும் உத்தரவிடப்பட்டது. வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகள் கையாளப்பட வேண்டிய சட்ட நடைமுறை குறித்து இத்தீர்ப்பில் விரிவாகச் சொல்லப்பட்டிருந்ததால், (இத்தீர்ப்பின் நகலை) உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் உத்தரவு பெற்று, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றங்களுக்கும் அனுப்பி வைக்கவும் வலியுறுத்தப்பட்டது.
.
உயர் நீதிமன்றத்தால் கவனத்தில் கொள்ளப்பட்ட சட்ட முரண்களும் விதி மீறல்களும்
.
1. புலன் விசாரணை அதிகாரியாக முதலில் செயல்பட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர், சம்பவம் நடந்தபோது இருந்ததாக முதல் தகவல் அறிக்கையில் சொல்லப்பட்ட தைன்ஸ் மற்றும் துரைராஜு ஆகியோரை விசாரிக்கவே இல்லை.
.
2. துணைக் காவல் கண்காணிப்பாளரால் விசாரிக்கப்பட்ட சாட்சிகள், சம்பவம் நடைபெற்றதாகவும், ஆனால் சாதிப் பெயரைச் சொல்லி அழகர்சாமியைத் தாக்கியது குறித்து எதுவும் குறிப்பிடாத சூழ்நிலையில், முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த சாட்சிகளை விசாரிக்காமல் விட்டது, புலன்விசாரணை அதிகாரி புலன் விசாரணையை நேர்மையான வகையிலும் பாரபட்சமற்ற வகையிலும் செய்யவில்லை என்பதைக் காட்டுகிறது.
.
3. முதல் தகவல் அறிக்கை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் போதே, துணைக் காவல் கண்காணிப்பாளர் வழக்கைப் புலன் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட அன்றே - வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவு 3(1)(ஙீ)அய் வழக்கிலிருந்து நீக்கம் செய்து, தன்னிச்சையாக காவல் ஆய்வாளரை மேல் விசாரணையை மேற்கொள்ள உத்தரவிட்டது ஏற்கத்தக்கதல்ல.
.
4. வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதி 7(1) இன்படி வன்கொடுமை தொடர்பான வழக்குகளை நேர்மையாகவும், பாராபட்சமற்ற வகையிலும், சரியான முறையிலும் புலன் விசாரணை செய்ய துணைக் காவல் கண்காணிப்பாளர் பதவிக்குக் குறையாத அதிகாரி புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றம் வைத்துள்ள நம்பிக்கையைப் பொய்ப்பிக்கும் விதத்தில் இவ்வழக்கின் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
.
5. அதே போல், புலன் விசாரணையைத் தொடர்ந்த காவல் ஆய்வாளரும் புலன் விசாரணையை நேர்மையான வகையில் மேற்கொள்ளவில்லை. துணைக்காவல் கண்காணிப்பாளர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 3(1)(ஙீ) அய் மட்டுமே வழக்கிலிருந்து நீக்கம் செய்துள்ளபோது, காவல் ஆய்வாளர் இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 147 மற்றும் 355 ஆகியவற்றையும் வழக்கிலிருந்து நீக்கம் செய்து, இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 341 மற்றும் 323 ஆகிய குற்றங்களுக்கு மட்டுமே சுப்பிரமணியனுக்கு எதிராக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பது விநோதமானது. குறிப்பாக, வன்கொடுமை நிகழ்வு 5 நபர்களால் நிகழ்த்தப்பட்டதாக சாட்சியங்கள் உள்ளபோது, ஒருவர் மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது விந்தையானது.
.
6. முதலில் துணைக் காவல் கண்காணிப்பாளரும், பின்னர் காவல் ஆய்வாளரும் முக்கிய சட்டப் பிரிவுகளை வழக்கிலிருந்து அவசர அவசரமாக சட்ட விதிமுறைகளை மீறி நீக்கம் செய்துள்ளனர்.
.
7. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய சிறப்பு நீதிமன்றமும் வழக்கின் விவரங் களை அலசி ஆராய்ந்து நீதிமனப்படி முடிவெடுக்காமல், காவல் ஆய்வாளரின் வேண்டுகோளை சிரமேற்கொண்டு ஏற்று வழக்குக் கோப்பினை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தது தவறு.
.
8. முக்கிய சட்டப் பிரிவுகளும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் நால்வரும் வழக்கிலிருந்து நீக்கப்பட்டிருந்த போதிலும், வழக்கில் முதல் தகவல் அளித்த நபருக்கு வாய்ப்பேதும் வழங்காமல், குற்றப்பத்திரிகையை கோப்பிற்கு எடுத்துக் கொண்ட அன்றே குற்றம் சாட்டப்பட்டவரின் பதிலுரையை ஏற்று, சொற்பத் தொகையை அபராதம் விதித்து வழக்கை குற்றவியல் நடுவர் அவசர அவசரமாக முடித்தது, சட்ட நெறிமுறைகளுக்கு எதிரானது.

-சு. சத்தியச்சந்திரன்
நன்றி: தலித்முரசு, ஜனவரி ௨009 & http://www.keetru.com/

வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் சிக்கல்களும் தீர்வுகளும்-9

ஒரு புகார்தாரரை, சட்டத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்யும் அமைப்பாக காவல்துறை செயல்பட்டு வருகிறது. காவல் துறையைப் பொறுத்தவரை, பொய் வழக்குப் போடுவது எவ்வளவு எளிதானதோ, அதைவிட எளிதானது, உண்மைப் புகாரை பொய்ப் புகார் எனத் தள்ளுபடி செய்வதுமாகும். அதன் ஒரு கொடூரமான வெளிப்பாடுதான், குற்ற நிகழ்வு குறித்து கொடுக்கப்பட்ட புகார் பொய்யானது என காவல் துறையினர் தள்ளுபடி செய்வது. இது, சட்ட மொழியில் "பொருண்மைப் பிழை' (Mistake of Fact) என்று கூறப்படுகிறது.

ஒரு குற்ற நிகழ்வு குறித்த புகார் குற்ற நிகழ்விடத்தின் மீது ஆளுகை உள்ள காவல் நிலையத்தில் செய்யப்படுமானால், அப்புகாரின் மீது எந்தெந்த சட்ட நடைமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; அவ்வாறானசட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படாத சூழல்களில் எந்தெந்த வகைகளில் தீர்வு பெறலாம் என்பதை இத்தொடரின் முந்தைய கட்டுரைகளில் விரிவாகப் பார்த்தோம். அவற்றின் அடுத்த கட்டமாக, குற்ற நிகழ்வு தொடர்பான புகாரை "பொய்யானதென' காவல் துறையினர் தள்ளுபடி செய்வதையும், அப்புகார் உண்மைதான் எனில், அதன் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிய சட்ட நடைமுறைகளையும் இப்போது பார்க்கலாம். இவை பொதுவான புகார்களுக்கும் பொருந்தும். எனினும், இத்தொடரின் கருப்பொருளான வன்கொடுமை வழக்குகளின் பின்னணியிலேயே இங்கு விளக்கப்படுகிறது. இந்த "பொருண்மைப் பிழை' என்பதை காவல் துறையினர் இரண்டு வகையில் பயன்படுத்தி, வன்கொடுமைப் புகார்களை / வழக்குகளை வீணடிக்கின்றனர்.

1. ஒரு வன்கொடுமைப் புகாரை முற்றாக பொய்ப் புகார் என்று கூறி மேல் நடவடிக்கையைக் கைவிடுவது. இது, பெரும்பாலும் வன்கொடுமை நிகழ்விற்கு மிகக் குறைந்த சாட்சியங்களே உள்ள புகார்களின்போது கையாளப்படும் சட்ட எதிர் அணுகுமுறையாகும். எடுத்துக்காட்டாக, ஒரு பட்டியல் சாதியினரோ, பழங்குடியினரோ மற்றவர்களால் சாதிய அடிப்படையில், பொதுப் பார்வையில் இவர்களை இழிவுபடுத்தும் நோக்கில் புரியும் குற்றமான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3(1)(X) இன் கீழான புகார், வன்கொடுமை குறித்த குற்றச்சாட்டை-வெறும் நடத்தை, நடவடிக்கை, அந்நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட அவதூறுச் சொற்கள் ஆகியவற்றைக் கொண்டு நிரூபிக்க வேண்டும். இத்தகைய சூழல்களில் காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்த பிறகு, தாம் புலன் விசாரணை செய்தபோது இப்புகாரில் உண்மையில்லை என்று புகாரைத் தள்ளுபடி செய்ய பெரும்பாலும் வாய்ப்புள்ளது.

2. வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவுகள் தவிர மற்ற இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் கொண்ட வன்கொடுமைப் புகார், இத்தகைய புகார்களில் வழக்கமான குற்றங்களுக்கான சாட்சியங்கள் (கொலை, கொடுங்காயம், காயம், வன்புணர்ச்சி போன்றவை) மறைக்க முடியாத வகையில் அமைந்திருக்கும்போது, வழக்கமான சட்டப் பிரிவுகளுக்கு மட்டும் (இந்திய தண்டனைச் சட்டம் போன்றவை) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டு, வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவுகளை கைவிடுவது என்ற தந்திரம் காவல் துறையால் கையாளப்படுகிறது.

இச்சூழலில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபரின் வழக்கை மீண்டும் தடத்தில் செலுத்தி, வழக்கைத் தொய்வின்றி நடத்துதல் என்பது, மிகப்பெரும் சவாலாக ஒவ்வொரு சமூக செயல்பாட்டாளருக்கும் அமைகிறது. இது குறித்தசட்ட விதிகள், நீதிமன்றத் தீர்ப்புகளில் வகுத்துரைக்கப்பட்டுள்ள நெறிமுறைகள் ஆகியவற்றை விரிவாகப் பார்ப்பதற்கு முன், ஒரு பெண் துணைக் காவல் கண்காணிப்பாளர் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளைப் புறக்கணித்த வழக்கு ஒன்றை அறிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.

சங்கர்-திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் உள்ள தேவராயன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கூலி விவசாயி. பட்டியல் சாதியைச் சார்ந்தவர். அவரது சொந்த ஊரில் 25 தலித் குடும்பங்கள் உள்ளன. அவ்வூரில் உள்ள நிலவுடைமையாளர்களான வன்னியர்கள், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். வன்னியர்களின் நிலங்களில் தலித்துகள் விவசாயக் கூலிகளாக உழைத்து வருகின்றனர். தலித் மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள், பொருளாதார சமூகச் சூழ்நிலைகள் போன்ற காரணங்களின் அடிப்படையில் பெரும்பாலும் புகார் வடிவம் பெறுவதில்லை. அவ்வாறான புகார்களுக்கு பெரிய அளவில் பலனேதும் இருப்பதில்லை என்ற நடைமுறையும், வன்கொடுமைப் புகார்களுக்குத் தடையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் 20.1.2003 அன்று மாலை 6 மணியளவில் சங்கர் தனது வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்க, தன்னுடைய தம்பி உளியனுடன் டி.வி.எஸ்.– 50 இரு சக்கர வாகனத்தில் காந்தபாளையம் என்ற இடத்தை நோக்கிச் சென்றிருக்கிறார். அவ்வாறு அவர்கள் போகும்போது, குறுகலான பாதை ஒன்றில் அமைந்துள்ள கடை ஒன்றின் முன் நின்று கொண்டிருந்த கும்பலை கடந்து செல்லும்போது, சங்கருக்கு பின்புறம் அமர்ந்திருந்த அவர் தம்பி உளியனின் கால், அங்கு நின்று கொண்டிருந்த ஏழுமலை என்ற வன்னியர் மீது தவறுதலாகப் பட்டு விட்டிருக்கிறது. இயல்பாக மன்னிப்பு கேட்ட பின்பும் ஆத்திரமடைந்த ஏழுமலை, சங்கரின் வண்டியை மறித்து, “சக்கிலியப் பயல்களுக்கு திமிராப் போச்சு'' என்று சத்தம் போட்டு, அவர்கள் இருவரையும் தாக்க முயன்றிருக்கிறார். பிரச்சினையை அறிந்து வந்த இருதரப்பு ஆட்களும் விலக்கிவிட்டு இருவரையும் அனுப்பி வைத்தனர்.

நகரத்துக்குச் சென்று மீண்டும் இரவு 8.30 மணியளவில் சங்கரும் அவர் தம்பியும் திரும்பும்போது, ஊர் எல்லையில் சங்கரின் தந்தை கண்ணனும், இன்னொரு தம்பியான சகாதேவனும் அவர்களுக்காக காத்திருக்கின்றனர்.விசாரித்தால், மாலையில் நடந்த பிரச்சினையை ஒட்டி ஏழுமலையுடன் மீண்டும் பிரச்சினை ஏற்படாமல் இவர்கள் இருவரையும் பாதுகாப்பாக வேறு பாதையில் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காகவே அவர்கள் அங்கு வந்து காத்திருப்பதாகச் சொல்கின்றனர். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, ஏழுமலையின் தலைமையில் 9 பேர் கொண்ட கும்பல் இவர்களை நோக்கி ஓடிவந்து வழிமறித்து, “சக்கிலிய தேவடியா பசங்களா, சாயங்காலம் எப்படி ஏழுமலையை அடித்தீர்கள்'' என்று சாதிப் பெயரைக் கூறி இழிவாகத் திட்டியதுடன் தம்மிடம் வைத்திருந்த கத்தி, இரும்புக் கம்பி, கம்பு போன்ற ஆயுதங்களால் நால்வரையும் கடுமையாகத் தாக்கினர். சிறிது நேரத்தில் ஊர் மக்கள் சிலர் வரவே, அக்கும்பல் ஓடி விடுகிறது.

இச்சம்பவத்தில் சங்கருக்கு வலது மேல்வரிசைப் பல் ஒன்று உடைந்துள்ளது. சகாதேவனுக்கு மூக்கிலும், உளியனுக்கு காலிலும், அவர்கள் தந்தை கண்ணனுக்கு உடலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் நேரடியாக போளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெறச் செல்ல, நால்வரும் உள் நோயாளியாக அனுமதிக்கப்படுகின்றனர். மறுநாள் (21.1.2003) நண்பகல் 2 மணியளவில் கடலாடி காவல் நிலையத்திலிருந்து ஒரு தலைமைக் காவலர் மருத்துவமனைக்கு வந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்ய சங்கரிடம் வாக்குமூலம் பெறுகிறார். இருப்பினும், புகார் வாக்குமூலத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கையின் நகல் அவருக்கு வழங்கப்படவில்லை. சம்பவம் நடந்த ஏழாம் நாள் (26.1.2003) இவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புகின்றனர். அதற்கும் இரண்டு நாள் கழித்தே (28.1.2003) அவர்கள் போளூர் துணைக் கண்காணிப்பாளரால் முதன் முறையாக விசாரிக்கப்படுகின்றனர்.

சங்கரின் வாக்குமூலப் புகார் மீது கடலாடி காவல் நிலையத்தில் ஏழுமலை மற்றும் 8 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 147, 148, 341, 323, 324 மற்றும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டப்பிரிவு 3(1)(X) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை குற்ற எண்.36/2003 ஆகப்பதிவு செய்யப்பட்டது தெரிய வந்தது. அதனினும் அதிர்ச்சி தரும் விதமாக ஏழுமலையை சம்பவம் நடந்த அன்று 6.30 மணியளவில் (ஏழுமலை மீது சங்கரின் தம்பி உளியனின் கால் தவறுதலாகப்பட்டது தொடர்பாக) சங்கரும் மற்றவர்களும் ஏழுமலையைத் தாக்கியதாகவும், ஏழுமலை பெருந்தன்மையாக அவர்களை விட்டு விட்டதாகவும் ஏழுமலையிடம் ஒரு பொய்ப்புகார் பெறப்பட்டு, கடலாடி காவல் நிலையத்தில் சங்கர் மற்றும் பிறர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 147, 148, 323, 324 மற்றும் 506(2) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உண்மையில் பாதிக்கப்பட்ட தரப்பினரின் புகாரை இரண்டாவதாகவும் பொய்ப் புகாரை முதலாவதாகவும் பதிவு செய்து, காவல் துறை தனது சாதியத்தைப் பாதுகாக்கும் கடமையைச் செவ்வனே செய்துள்ளது. இப்பொய் வழக்கு விபரங்களை அறிந்த சங்கரும் மற்றவர்களும் திருவண்ணாமலை அமர்வு நீதிமன்றத்தை அணுகி முன் பிணை பெற்றுத் தப்பித்துள்ளனர்.சங்கர் கொடுத்த புகார் வாக்குமூலத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், கட்டணமற்ற நகலும் சட்டப்படி அவருக்கு வழங்கப்படவில்லை. அதே சமயம், அப்புகாரில் குறிப்பிடப்பட்டிருந்த ஏழுமலை மற்றும் 8 நபர்களையும் கடலாடி காவல் துறையினர் எவ்வித கைது நடவடிக்கைக்கும் உட்படுத்தவில்லை.

இந்நிலையில், ஏழுமலையும் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களும் சங்கரையும் மற்றவர்களையும், “எங்களை ஒண்ணும் கிழிக்க முடியாது. நீங்க தான் கோர்ட்டுக்கு போயிட்டு வந்துக்கிட்டு இருக்கணும்'' என்று சாதிப்பெயரைச் சொல்லி மேலும் இழிவுபடுத்தியிருக்கின்றனர். இது தொடர்பாக சங்கர் 10.6.2003 அன்று காவல் துறையின் உயர் அதிகாரிகளுக்கு கொடுத்த புகாருக்கும் எவ்விதப் பலனுமில்லை.

2003 நவம்பர் மாதத்தில் தன் புகார் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையைத் தெரிந்து கொள்ள சங்கர் போளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். அவரது புகார் மீதான வழக்கில் காவல் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இது தொடர்புடைய ஆவணங்களின் நகலுக்கு விண்ணப்பித்து நகல்களைப் பெற்றவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

சங்கர் கொடுத்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு நீக்கப்பட்டு, வெறும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழான குற்றங்களுக்காக மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதிலும், சங்கரின் பல் ஒன்று தாக்குதல் காரணமாக உடைந்து போனதால், அக்குற்ற நிகழ்விற்கு குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 326 (பயங்கரமான ஆயுதத்தாலோ, வழியினாலோ கொடுங்காயம் விளைவித்தல்) கூட சேர்க்கப்படவில்லை. மேலும் 20.1.2003 நடைபெற்ற சம்பவத்திற்கு 24.1.2003 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்கு என்பதால், வழக்கின் புலன் விசாரணை போளூர் துணைக் காவல் கண்காணிப்பாளரால் மேற்கொள்ளபட்ட முதல் தகவல் அறிக்கையுடன் கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. அன்றைய தினமே போளூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் சட்டப்பிரிவு மாற்ற அறிக்கை ஒன்றை, போலிஸ் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில், சம்பவத்தில் காயமுற்ற சங்கரையும் மற்றவர்களையும் மருத்துவமனையிலும், மற்ற 5 சாட்சிகளை சம்பவ இடத்திலும் வைத்து தான் விசாரணை செய்ததாகவும், விசாரணையில் சங்கரைத் தவிர மற்ற சாட்சிகள் எவரும் சங்கர் மற்றும் அவரது குடும்பத்தை "சக்கிலிய தேவடியா பசங்களே' என சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாக வாக்குமூலத்தில் கூறவில்லை என்பது விசாரணையில் தெரிந்ததாகவும், எனவே சங்கர் எதிரிகளைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மிகைப்படுத்தி, சாதிப்பெயரைச் சொல்லி திட்டி அடித்ததாக வாக்குமூலம் கொடுத்ததால், வன்கொடுமைத் தடுப்புப் பிரிவு 3(1)(X) பொருந்தாது எனவும், எனவே அப்பிரிவை மாற்றி இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகளின்படி வழக்கை மாற்றம் செய்வதாகவும் கூறப்பட்டிருந்தது.அதன் அடிப்படையில், வழக்கின் புலன் விசாரணை காவல் ஆய்வாளரால் மேற்கொள்ளப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, போளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக சங்கர் அறிந்து கொண்டார். சங்கர் தனக்குத் தெரிந்த வழக்குரைஞர் ஒருவர் மூலம் இக்கட்டுரையாளருடன் தொடர்பு கொண்டார். வன்கொடுமை வழக்குகளின் சமூக-சட்ட முக்கியத்துவம் கருதி அவற்றை துணைக் கண்காணிப்பாளர் பதவிக்குக் குறையாத அளவிலான காவல் அதிகாரிதான் புலன் விசாரணை செய்ய வேண்டும் என்ற வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதியை முற்றிலும் புறக்கணிக்கும் விதமாகவும், நீர்த்துப்போகும் விதமாகவும் போளூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் செயல்பட்ட விதம், இவ்வழக்கில் ஆவணங்களுடன் தெளிவுபட அமைந்திருந்ததால், இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, சங்கர் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு குற்றவியல் அசல் மனு, மார்ச் 2004 இல் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “மேற்சொன்ன சூழலில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை, உண்மைக்குப் புறம்பாகவும் சட்டவிதிமுறைகளைப் புறக்கணித்தும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், மீண்டும் வழக்கை கூடுதல் புலன் விசாரணை செய்து முறையான வகையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டுமெனவும், அப்புலன் விசாரணை வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளில் கண்டுள்ளபடி துணைக் காவல் கண்காணிப்பாளர் மேற்கொள்ள வேண்டும் எனவும், இந்த வன்கொடுமைக் குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளின்படி தீருதவித் தொகை வழங்கிட உத்தரவிட வேண்டுமென்றும்'' கோரப்பட்டது.

இம்மனுவில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை, தவறான குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில் வழக்கு விசாரணையை போளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நடத்தக்கூடாது எனவும் தடை உத்தரவு கோரப்பட்டது. இம்னுவை 13.3.2004 அன்று முதலில் விசாரித்த நீதிபதி எஸ். அசோக்குமார், இறுதி விசாரணைக்கு மனுவை ஏற்றுக் கொண்டதுடன், மனுதாரர் கோரியபடி இடைக்காலத் தடையையும் வழங்கி உத்தரவிட்டார். உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குற்றம் சாட்டப்பட்டவர்களான ஏழுமலையும் மற்ற 8 நபர்களும் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கும் உயர் நீதிமன்றம் அறிவிப்பு அனுப்ப உத்தரவிட்டு கிடைக்கப் பெற்றது. தொடக்கக் கட்டத்தில் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத அவர்கள், மனுவின் இறுதி விசாரணை மேற்கொள்ளப்படவிருந்த பிந்தைய காலகட்டத்தில் சற்று கலக்கமடைந்ததாகவே தெரிகிறது.

2008 சூன் மாதத்தில் ஒரு நாள் மனுதாரரான சங்கரை அழைத்துக் கொண்டு, குற்றம் சாட்டப்பட்ட ஏழுமலையும் ஒரு சிலரும் திருவண்ணாமலையைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் சிலருடன் இக்கட்டுரையாளரை சந்தித்து, “சம்பவம் தெரியாமல் நடந்து விட்டதாகவும் ஆகையால் அதைப் பெரிதுபடுத்த வேண்டாம்; சமாதானமாகப்போய்விடலாம்'' என்றும் கூறினார். "முதலில் நடைபெற்ற சம்பவத்தோடு பிரச்சினை முடிந்திருந்தால் இந்த அளவிற்கு வந்திருக்காது. இரண்டாவது சம்பவம் (சங்கர், அவர் தந்தை மற்றும் தம்பிகள் தாக்கப்பட்டது) என்பது எதிர்பாராதது அல்ல' என்றும், அது தவிர சாதிய வன்கொடுமை வழக்குகளை சமரசம் செய்யும் போக்கு, வன்கொடுமைக்குத் துணை போகும் கொடிய செயலாகும் என்றும் அவர்களிடம் விளக்கப்பட்டது.

உயர் நீதிமன்றத்தால் சங்கரின் மனு தள்ளுபடி செய்யப்படும் நிலை வந்தால் கூட, மனுவை திரும்பப் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர்களிடம் கூறப்பட்டது. பாராட்டப்பட வேண்டிய விதமாக சங்கரும் இதே கருத்தில் உறுதியாக இருந்தார். குற்றஞ்சாட்டப்பட்டவர்களுடன் வந்திருந்த வழக்குரைஞர்கள் பல்வேறு வகையில் வலியுறுத்திய போதும், வன்கொடுமை வழக்கில் சமரசம் என்பது இயலாது, கூடாது என்று உறுதியாகத் தெரிவிக்கப்பட்டது. 10.11.2008 அன்று சங்கரின் மனு நீதிபதி எஸ். தமிழ்வாணன் அவர்களின் முன்னிலையில் இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சங்கர் அளித்த புகாரின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் புலன் விசாரணை அதிகாரியான போளூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட அன்றே, வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சாட்சியான சங்கர், தன்னை ஏழுமலையும் மற்றவர்களுக்கும் தாக்கிய போது, தன்னையும் தன் குடும்பத்தையும் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு இழிவாகத் திட்டியதாகக் கூறியிருந்தபோது, மற்ற சாட்சிகள் எவரும் அவ்வாறு கூறவில்லை என்ற காரணம் காட்டி, வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவுகளின் கீழ் கொண்டு வந்தது தவறு என்றும்; ஒரு குற்றச்சாட்டு வாக்குமூலத்தில் உள்ளபோது, புலன் விசாரணை அதிகாரி நீதிமன்றமாகத் தன்னைக் கருதிக் கொண்டு செயல்பட்டது தவறு என்றும்; அவ்வாறு ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை செல்லத்தக்கதல்லவென அறிவித்தும், வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளின்படி மீண்டும் புலன் விசாரணை செய்ய வேண்டுமென்றும்; வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தீருதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.

-சு. சத்தியச்சந்திரன்
நன்றி: தலித்முரசு, நவம்பர் 2008